காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மிக தீவிரமான முறைகேடுகள் நடந்திருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் போட்டியிடுகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட பின்னர் சசி தரூர் தரப்பு ஒரு பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் எனவே அந்த மாநிலத்தில் உள்ள வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
"வழக்கமான நடைமுறைகளை ஏற்று கொள்வதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரியை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். பல்வேறு பிரச்னைகளைப் பற்றி அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அதன் விவரங்களை இப்போது செல்ல முடியாது" என சசி தரூரின் தேர்தல் முகவர் சல்மான் சோஸ் தெரிவித்துள்ளார்.
மிஸ்திரிக்கு தரூர் தரப்பினர் எழுதிய கடிதத்தில், "உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்தையில் உள்ள மிகக் கடுமையான முறைகேடுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர எங்கள் தரப்பு விரும்புகிறது. உண்மையில் நடந்தது மோசமான சம்பவம். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நம்பகத்தன்மையும், நேர்மையும் இல்லை.
உத்தரபிரதேசத்தில் நடந்தது முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முறைகேடுகளில் அவரது ஆதரவாளர்கள் எவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே அறிந்திருந்தார் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இல்லை என்பதை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம். அப்படி அவருக்கு தெரிந்திருந்தால் அதை நடக்க விட்டிருக்க மாட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸுக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தலை களங்கப்படுத்த அனுமதிக்க கூடாது. வாக்குப்பெட்டிகளில் அதிகாரப்பூர்வமற்ற முத்திரைகள் இருந்தது. வாக்குச் சாவடிகளில் அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் இருந்தனர். முறைகேடாக வாக்குபதிவு நடந்தது.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த கறைபடிந்த செயல்முறையை நிலைநிறுத்த அனுமதித்தால் இந்தத் தேர்தல் எவ்வாறு சுதந்திரமாகவும் நியாயமாகவும் கருதப்படும். எனவே உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வாக்குகளும் செல்லாதவையாகக் கருதப்பட வேண்டும் என்று கோருகிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள 65 வாக்குச் சாவடிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.