முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கொலையின் பின்னணியில் உள்ள சதியை குறித்து ஆராயும் வகையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தை (எம்டிஎம்ஏ) 24 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு கலைத்துள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பின் ஒரு அங்கமாக பல்நோக்கு விசாரணை ஆணையம் செயல்பட்டு வந்தது. மத்திய பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் இந்த ஆணையத்தில் இடம்பெற்றிருந்தனர். எம்டிஎம்ஏ-வை கலைப்பதற்கான உத்தரவு மே மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் நிலுவையில் உள்ள விசாரணை சிபிஐயின் வேறு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1991ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி, நீதிபதி எம்.சி. ஜெயின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி செயலை கண்டறியும் வகையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. எம்.சி. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 1998 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகாலத்திற்கு எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டது.
ஆனால், விசாரணையில் அது எந்த பெரிய முன்னேற்றத்தையும் அடையவில்லை. இருப்பினும், ஆண்டுக்கு ஒரு முறை விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அளவில் உள்ள அலுவலரின் தலைமையில் எம்டிஎம்ஏ அமைக்கப்பட்டு வங்கி பரிவர்த்தனைகள் உள்பட வழக்கின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தகவல்களைக் கோரி இலங்கை, இங்கிலாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு எம்டிஎம்ஏ 24 கடிதங்களை அனுப்பியது.
இதில் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு இந்த நாடுகளால் பதிலளிக்கப்பட்டன. மேலும், சில கோரிக்கைகளுக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும், நிலுவையில் உள்ள சில நீதித்துறை கோரிக்கைகள் மற்றும் எம்டிஎம்ஏ அனுப்பிய கடிதம் பற்றிய விவகாரம் இப்போது சிபிஐயால் கையாளப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பல்நோக்கு விசாரணை ஆணையம், தொடக்க காலத்தில், இணை காவல்துறை இயக்குநர் அளவில் உள்ள அலுவலரின் தலைமையில் இயங்கி வந்தது. இதையடுத்து, டிஐஜி அளவிலான அலுவலரிடம் இந்த ஆணையம் ஒப்படைக்கப்பட்டது. கொலையின் சதி செயல் பல நாடுகளை நோக்கி கையை காட்டிய நிலையிலும், உண்மைகள் எதனையும் விசாரணை ஆணையத்தால் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1991ஆம் ஆண்டு, மே 21ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் தற்கொலை படையால் கொல்லப்பட்டார்.