கேரள மநிலத்தில் கவர்னர் ஆளும் சி.பி.எம் அரசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. கேரள பல்கலைகழகத்தில் செனட் உறுப்பினர்களின் பதவியை பறிக்கும் கவர்னரின் நடவடிக்கையை உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து விமர்ச்சித்திருந்தார். இந்த நிலையில் கவர்னர் பதவியின் கண்ணியத்துக்கு அமைச்சர்கள் களங்கம் விளைவித்தால் அவர்களின் பதவியை திரும்பப்பெறும் நடவடிக்கை எடுப்பதாக நேற்று முன் தினம் கவர்னர் ஆரிப் முகஹம்மதுகான் அறிவித்திருந்தார். இதற்கிடையே வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரம் திரும்பினார்.



 

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் கவர்னர் ஆரிப் முஹம்மதுகானின் செயல்பாட்டை விமர்சித்து பேசினார். முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "யாரும் யாரையும் விமர்ச்சிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுப்பது நம்முடைய சமூகத்தில் ஏற்புடையதாக இருக்காது. விமர்சனம் மற்றும் கருத்தை வெளிப்படுத்த நமது அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரம் கொடுக்கிறது. கூட்டாட்சிகொள்கையை கொண்டது நமது நாடு. கூட்டாட்சித் தத்துவத்தில் கவர்னரின் கடமைகளும் பொறுப்புக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து அரசியலமைப்பு தெளிவாக வரையறுத்துள்ளது.

 



 

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனையையும், உதவியையும் பெற்று செயல்படுவதே கவர்னரின் பொறுப்பு. கவர்னரின் அதிகாரம் மிகவும் குறுகியது என டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். டெல்லி அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நடந்த வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி கவர்னர் செயல்பட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் கட்சி அல்லது முன்னணியின் தலைவர் முதல்வராக நிச்சயிக்கப்படுவார். முதல்வர் அமைச்சர்களை முடிவுசெய்து கவர்னருக்கு லிஸ்ட் கொடுப்பார். முதல்வர் ஆலோசனையின்பேரில் கவர்னர் முடிவெடுக்கிறார்.

 

நமது நாட்டின் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படுவேன் என ஒருவர் அறிவித்தால் அது செல்லுபடியாகாது. சமூகத்தின் முன் நாம் யாரும் அவமானப்பட்டுவிடக்கூடாது. கேரள பல்கலைகழகத்தின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். செனட் உறுப்பினர்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கவர்னரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது" என்றார்.