பஞ்சாபில் தனது மூத்த அதிகாரியால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி இன்று காலை காவல் நிலையத்திற்குள் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது சர்வீஸ் ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். ஹோஷியார்பூரில் உள்ள ஹர்யானா காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டவர் சதீஷ் குமார். வியாழன் அன்று தண்டா காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலரான ஓன்கர் சிங், ஹர்யானா காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தியதாகவும் அப்போது, தன்னை மோசமான வார்த்தைகளை சொல்லி திட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளியாகியுள்ள வீடியோவில், "என்னை அப்படி அவமானப்படுத்துவதை விட, என்னை சுட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஓன்கர் சிங்கிடம் சொன்னேன்" என சதீஷ் குமார் கூறியுள்ளார். ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலரான ஓன்கர் சிங், தான் அளித்த பதிலில் திருப்தி அடையவில்லை என்றும் அதானலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளார்.
"பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவிருந்த வழக்குகள் குறித்து என்னிடம் கேட்டார். நான் கையாளும் ஒரு வழக்கு மட்டுமே உள்ளது என்றும் மற்ற வழக்குகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவரிடம் கூறினேன்.
அதன் பிறகு அவர் என்னை அவமானப்படுத்தினார். அதோடு நிற்காமல், பதிவு புத்தகத்திலும் என் மீது புகார் பதிவு செய்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு எனது வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்தேன். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓன்கர் சிங், போலீஸ் லைனுக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என சதீஷ் குமார் வீடியோவில் கூறியுள்ளார்.
இதற்கு மத்தியில், ஹோஷியார்பூரில் உள்ள மூத்த காவல் கண்காணிப்பாளர் சர்தாஜ் சிங் சாஹல், ஜூனியர் போலீஸ்காரர்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் தன்னை அணுகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050