உத்தரகாண்ட் பித்தோராகரில் உள்ள தார்ச்சுலா நகரில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கிட்டத்தட்ட 50 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேக வெடிப்பு, சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.






மேக வெடிப்பின் பின்விளைவுகள் மற்றும் காளி நதி அப்பகுதியில் எப்படி பாய்ந்து சென்றது ஆகியவை வீடியோக்களில் பதிவாகியுள்ளன. பித்தோராகர் காவல்துறை அலுவலர், மேக வெடிப்பின் கிளிப் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், கொட்டிலா கிராமத்தில் சுமார் 50 வீடுகள் நீரில் மூழ்கியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். வீடியோவில், நதி முழு வேகத்துடன் பாய்வது பதிவாகியுள்ளது.


மற்றொரு பதிவில், ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என உள்ளூர் மக்களை எச்சரித்த போலீசார், ஆற்றின் மேல் அமைந்துள்ள பாலங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஆறு அபாய அளவை எட்டுவதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம்" என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


மேக வெடிப்பின் காரணமாக பெண் ஒருவர் இறந்துள்ளதாக பித்தோராகர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஷிஷ் சவுகான், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் காவல்துறையின் தீயணைப்பு துறையால் பகிரப்பட்ட மற்றொரு வீடியோவில், ஒரு வீடு ஆற்றில் இடிந்து விழுவதை பார்க்கலாம். 


தீயணைப்புத் துறை, மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலை பிரதேசங்கள் அதிகம் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலம், புனித யாத்திரை தலங்களுக்கு பெயர் பெற்றது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அங்கு ஏற்படும்.


 






இச்சூழலில், மாறி வரும் காலநிலை மாற்றம் மேலும் கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பு உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன.


கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கி, வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.