தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார், கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சராக பதவியேற்றார்.


சரத் பவார், அஜித் பவார் இடையே வார்த்தை போர்:


கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவிடும் என சரத் பவார் விமர்சித்திருந்த நிலையில், கட்சியின் பெரும்பாலானோரின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் வயதை கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும் என அஜித் பவார் சாடியிருந்தார்.


"மற்ற கட்சிகளில் தலைவர்கள் குறிப்பிட்ட வயதுக்கு பின் ஓய்வு பெறுகின்றனர். பாஜக தலைவர்கள் 75இல் ஓய்வு பெறுகிறார்கள். எப்போது நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள்? புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நாங்கள் தவறு செய்தால், சொல்லுங்கள். உங்கள் வயது 83, நீங்கள் ஓய்வு பெறுவீர்களா? இல்லையா?" என அஜித் பவார் பேசியிருந்தார்.


வயது குறித்த அஜித் பவாரின் விமர்சினம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி ரீதியான பிளவு தற்போது தனிப்பட்ட அளவில் விமர்சனம் செய்வது வரை சென்றுள்ளது. 


"82 வயசோ..92 வயசோ..நான் எப்போவும் ஆக்டிவ்தான்"


இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய சரத் பவாரின் மகளும் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, "இப்போது சீனியராக இருப்பவர்கள் எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் ஏன் வேலை செய்வதை நிறுத்த வேண்டும்? ரத்தன் டாடாவுக்கு 86 வயது. சீரம் இன்ஸ்டிடியூட் சைரஸ் பூனாவாலாவுக்கு வயது 84. அமிதாப் பச்சனுக்கு வயது 82. எங்களை மதிக்காமல் இருங்கள். ஆனால், எங்கள் தந்தையை மதிக்கவில்லை என்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்றார்.


அஜித் பவாரின் விமர்சனத்திற்கு சரத் பவார் காட்டமான பதில் அளித்துள்ளார். 82 வயதோ, 92 வயதோ தான் இப்போதும் செயல்பட்டு வருவதாக சரத் பவார் கூறியுள்ளார். 


டெல்லியில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவர் இப்படி பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் அஜித் பவார், செயல் தலைவராக பதவி வகித்த பிரபுல் படேல் ஆகியோரை சரத் பவார் அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளார். அப்போது, சரத்பவாரிடம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இல்லை. கட்சிதான் மேலானது. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்" என்றார்.


சரத் பவார் கூட்டிய தேசிய செயற்குழு கூட்டத்தை சட்ட விரோதமாக அறிவித்துள்ள அஜித் பவார் அணி, "கட்சி பிரச்னை விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை, கட்சிக்குள் இருக்கும் எந்தவொரு நபருக்கும் தேசிய செயற்குழு/ தேசிய அலுவலகப் பொறுப்பாளர்கள்/ மாநிலக் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் எந்தவொரு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்க அதிகாரம் இல்லை" என குறிப்பிட்டுள்ளனர்.