மகாராஷ்டிர அரசியலில் தொடர் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் நேற்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


மூத்த தலைவர்கள் அதிரடி நீக்கம்:


பாஜக அரசாங்கத்தில் இணைந்த மூத்த தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சரத் பவார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோரை தேசியவாத காங்கிரஸில் இருந்து சரத் பவார் நீக்கியுள்ளார். சமீபத்தில்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பதவி வகிப்பவர் சுனில் தட்கரே.


சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஜெயந்த் பாட்டிலை மகாராஷ்டிரா மாநில தலைவர் பதவியில் இருந்து பிரபுல் படேல் நீக்கிய நிலையில், சரத் பவார் அதற்கு பதிலடி தந்துள்ளார். முன்னதாக, அஜித் பவாரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக மண்டல  தலைவர் பதவியில் இருந்த நரேந்திர ரத்தோர், அகோலா நகர மாவட்டத் தலைவர் விஜய் தேஷ்முக், தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ள சிவாஜிராவ் கர்ஜே ஆகியோரை சரத் பவார் நீக்கியிருந்தார்.


அதேபோல, ஆளும் அரசாங்கத்தில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு எதிராக சரத் பவார் ஆதரவு அணி, பதவி நீக்க நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த பதவி நீக்க நோட்டீஸ் செல்லாது என அஜித் பவார் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எங்களில் 9 பேருக்கு எதிராக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த நோட்டீசுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களுடன் கட்சி உள்ளது" என்றார்.


என்சிபியில் ரிப்பீட்டாகும் சிவசேனா எபிசோட்:


தங்களின் ஒப்புதலுக்கு பிறகே, அஜித் பவார், பாஜக கூட்டணியில் இணைந்ததாக கூறப்படுகிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சரத் பவார், "இது அற்பத்தனமான பேச்சு. அறிவுத்திறன் குறைந்தவர்களால்தான் இதைச் சொல்ல முடியும். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை ஊக்குவிக்க போகிறேன். சில தலைவர்கள் செய்ததைக் கண்டு அவர்கள் ஏமாற்றமடையக் கூடாது" என்றார்.


சமீபத்தில், சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை சேர்ந்த தலைவர்களை அதிரடியாக நீக்கியது. அதற்கு பதிலடியாக, ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது, இதேபோன்ற சம்பவம், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நடந்து வருகிறது.