சிக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தானி அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் மத்திய அரசு கொந்தளிப்பை ஆழ்த்தியது.


காலிஸ்தானி ஆதரவாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதா கனடா?


அதேபோல, சமீபத்தில், கனடாவில் சென்ற அணிவகுப்பு வாகனம் ஒன்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் காலிஸ்தானி ஆதரவாளர்களுக்கு ஆதரவாக கனட அரசு செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


இந்த நிலையில், கனடாவில் ஒட்டப்பட்ட காலிஸ்தானி போஸ்டர்களில் இந்திய தூதர்களின் பெயரை குறிப்பிட்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் கண்டிப்புடன் பேசியுள்ள அவர், "கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டு நாடுகளிடம் இந்தியா இந்த பிரச்னையை எழுப்பும்" என்றார். 


அமெரிக்க, பிரிட்டன் நாடுகளிடம் கறார் காட்டும் ஜெய்சங்கர்:


ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "காலிஸ்தானிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற எங்களின் கூட்டு நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது நம் உறவுகளை பாதிக்கும். இந்த சுவரொட்டி பிரச்னையை இந்த நாடுகளின் அரசாங்கத்திடம் எழுப்புவோம்.


அதேபோல, காலிஸ்தானி ஆதரவாளர்கள், ஜூலை 8ஆம் தேதி டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகங்களை நோக்கி எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சூழலில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


ஒட்டாவாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, டொராண்டோவில் உள்ள இந்திய தூதர் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு போஸ்டரில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய தூதர் வர்மா, "கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில், அவர்கள் வெளிநாட்டு தூதர்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கின்றனர். இது கனடிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் நோக்கமாக இருக்காது" என்றார்.


பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு நாட்டில் இருக்கும் இந்திய தூதர்களும் பாதுகாப்பு அமைப்புகளே காரணம் என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆண்டு, ஜூன் மாதம் வான்கூவரின் சர்ரேயில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காலிஸ்தான் புலிப் படை (KTF) தலைவராக இருந்த நிஜ்ஜார் கொல்லப்பட்டார். முதற்கட்ட தகவலின்படி, நிஜ்ஜார் இரண்டு பேரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.