மகாராஷ்டிரா அரசியலில் இன்று மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, இன்று துணை முதலமைச்சராக பதவியேற்றிருப்பது அரசியலில் புயலை உருவாக்கியுள்ளது. தன்னுடைய அண்ணன் மகன், இரண்டாவது முறையாக கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது சரத் பவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


"இது ஒரு பெரிய விஷயம் அல்ல"


இந்த நிலையில், இதுகுறித்து கூலாக பதில் அளித்துள்ள சரத் பவார், "இது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் இந்த பிரச்னை தீர்க்கப்படும்" என்றார். செய்தியாளர்களுடன் இதுபற்றி விரிவாக பேசியுள்ள அவர், "இரண்டு நாட்களுக்கு முன்பு, தேசியவாத காங்கிரஸ் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.


அப்போது, அவர் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடை முடிந்துவிட்டது. நீர்ப்பாசன புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பேசினார். எனது கட்சிக்காரர்கள் சிலர் அமைச்சராக பதவியேற்று கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் (பாஜக) இணைந்ததில் இருந்தே, அனைத்து குற்றச்சாட்டுகளும் விடுவிக்கப்பட்டு விட்டன என்பது தெளிவாகிறது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


'பிரதமர் மோடிக்கு நன்றி'


ஜூலை 6ஆம் தேதி கட்சியின் அனைத்துத் தலைவர்களின் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். அங்கு சில முக்கியப் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, கட்சிக்குள் சில மாற்றங்களைச் செய்யவிருந்தன. ஆனால், அந்தக் கூட்டத்திற்கு முன்பே, சில தலைவர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.


1980களில் எனது கட்சிக்குள் நெருக்கடியை எதிர்கொண்டது. எனவே, இது புதிய விஷயம் அல்ல. 1980இல் நான் வழிநடத்திய கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர். பின்னர் அனைவரும் வெளியேறினர். அப்போது, 6 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், நான் கட்சியை பலப்படுத்தினேன். என்னை விட்டு வெளியேறியவர்கள் அவர்களின் தொகுதிகளில் தோற்றனர். அஜித்திடம் இருந்து ஒரு அழைப்பு கூட வரவில்லை. கட்சியில் கலகம் செய்த கட்சிக்காரர்கள் எனது தனிப்பட்ட எதிரிகள் அல்ல" என்றார்.


கட்சியின் சில தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த சரத் பவார், "எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலகம் செய்த தலைவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். நான் கட்சியின் தலைவராக இருந்து, பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோரை முக்கிய பதவிகளில் நியமித்தேன். ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்புகளை பின்பற்றவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கட்சிக் கொள்கையை மீறி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.