மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் மகாராஷ்டிராவை பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் மராத்திய சமூகத்தினர், அம்மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதமாக உள்ளனர். அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். 


மராத்திய இடஒதுக்கீடு விவகாரம்:


கடந்த 1962ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலத்தில், மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த 18 பேரில் 12 முதலமைச்சர்கள் மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்களே ஆவர். சட்டப்பேரவை உறுப்பினர்களில் 60 சதவிகிதத்தினர், மராத்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், காலப்போக்கில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 


இதன் காரணமாக, தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், அம்மாநில அரசியலை உலுக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான சரத் பவாரின் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணம் இணையத்தில் வைரலானது.


அதில், சரத் பவார், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. மராத்திய சமூகத்தை சேர்ந்த சரத் பவாரை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என அந்த சாதிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 


இணையத்தில் வைரலாகும் சரத் பவாரின் சாதிச் சான்றிதழ்:


இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் சாதிச் சான்றிதழ் பொய்யானது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலே விளக்கம் அளித்துள்ளார். 


இதுகுறித்து விரிவாக பேசிய சரத் பவார், "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் மீது அனைத்து மரியாதையும் உண்டு. ஆனால், நான் பிறந்த சாதியை மறைக்க விரும்பவில்லை. உலகம் முழமைக்கும் என் சாதி தெரியும். நான் சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன். ஆனால், அந்த சமூகத்தின் பிரச்னைகளை தீர்க்க நான் அனைத்தையும் செய்வேன்" என்றார்.


மராத்திய இடஒதுக்கீடு குறித்து பேசிய அவர், "இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரம்பில் உள்ளது. மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் இளைய தலைமுறையினர் தீவிரமாக உள்ளனர். அதை புறக்கணிக்க முடியாது. ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கே உள்ளது" என்றார்.