காற்று மாசுபாட்டின் காரணமாக இந்தியாவின் முக்கிய நகரங்கள், வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது. 


நாட்டின் முக்கிய முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் IQAir தகவல் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்பட்டனர்.


டெல்லியை உலுக்கும் காற்று மாசு:


பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில், டெல்லியின் காற்றின் தரம் இன்று மேலும் மோசமடைந்திருப்பது மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. அங்கு நிலவி வரும் வானிலையும் உகந்ததாக இல்லாததால் இதே நிலை தொடரும் என கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில் ஒன்பது நிலையங்கள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 363ஆக பதிவாகியுள்ளது. இது மிகவும் மோசமான நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்ட போதிலும், நேற்று முன்தினம் தீபாவளியன்று, தடையை காற்றில் பறக்கவிட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அதன் விளைவாக, காற்று மாசு வரலாறு காணாத அளவு அதிகரித்தது. சுவிட்சர்லாந்து நிறுவனமான IQAir வெளியிட்ட தரவுகளின்படி, நேற்று, உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. 


உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள்:


டெல்லிக்கு அடுத்தப்படியாக, பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்கள் மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் மும்பையும் கொல்கத்தாவும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளை ஒப்பிடுகையில் தீபாவளியன்று காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது.
 
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மக்கள் பட்டாசுகளை வெடித்ததால் குறைந்த வெப்பநிலைக்கு மத்தியில் மாசு அளவு அதிகரித்தது. காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு 275 ஆக பதிவானது. அது, படிப்படியாக அதிகரித்து மாலை 4 மணிக்கு 358 ஆக உயர்ந்தது.


காற்றின் தரக் குறியீடு, பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்டிருந்தால் நல்லதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 51 மற்றும் 100க்கு இடையே இருந்தால் அது திருப்திகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 101 மற்றும் 200க்கு இடையே இருந்தால் அது மிதமானதாகவும், 201 மற்றும் 300க்கு இடையே இருந்தால் அது மோசமானதாகவும் கருதப்படுகிறது. 


301 மற்றும் 400க்கு இடையே இருந்தால், அது மிக மோசமானதாக கருதப்படுகிறது. 401 மற்றும் 450க்கு இடையே இருந்தால் அது கடுமையானதாகவும் 450க்கு மேல் இருந்தால் மிக கடுமையானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.