நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலமாக உள்ளது மகாராஷ்டிரா. இப்படிப்பட்ட மகாராஷ்டிராவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சரத் பவார். மாநிலம் மட்டும் இன்றி நாடு முழுவதும் மதிக்கத்க்க தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர்.


மூத்த அரசியல் தலைவர் சரத் பவார்:


'லோக் மஜே சங்கதி' என்ற பெயரில் இவரின் சுயசரிதை புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக திருத்தப்பட்ட 'லோக் மஜே சங்கதி' புத்தகம் சமீபத்தில் வெளியானது.


தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி அமைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்ததாக சரத் பவார் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என பிரதமர் மோடியிடம் தெளிவாக கூறியதாக சரத் பவார் புத்தகத்தில் எழுதியுள்ளார்.


"என்சிபியுடன் கூட்டணி சாத்தியமா என பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், நான் அந்தச் செயலில் ஈடுபடவில்லை. இது பா.ஜ.வின் ஆசை மட்டுமே தவிர, அவர்களுடன் முறையான பேச்சு வார்த்தை நடக்கவில்லை. 


சுயசரிதையில் மனம் திறந்த சரத் பவார்:


ஆனால், இரு கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இடையே அதிகாரமற்ற பேச்சுவார்த்தை நடந்தது. என்சிபிக்கு சிறிதும் விருப்பம் இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதை பா.ஜ.க.விடம் மிகத் தெளிவாகக் கூற வேண்டியிருந்தது. அதன்படி, 2019 நவம்பரில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன்.


கடந்த 2019ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி, பிரதமர் மோடியைச் சந்தித்தேன். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டபோது விவசாயிகளின் துயரங்கள் குறித்து பேச சென்றேன். 


நான் மோடியைச் சந்தித்து, நமக்கு (பாஜக மற்றும் என்சிபி) இடையே அரசியல் கூட்டணியே இருக்க முடியாது என்று மிகத் தெளிவாகச் சொன்னேன். ஆனால், நான் இதைச் சொல்லும்போது, ​​பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் தலைவர்களில் ஒரு பகுதியினர் என் கட்சியில் இருந்தனர் என்பதை சொல்ல விரும்புகிறேன்" என புத்தகத்தில் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.


"மோடியிடமே தெளிவாக கூறினேன்"


"அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்திலும், கட்சி தொடங்கிய ஆரம்ப நிலையில் என்சிபியுடன் பாஜக கூட்டணி அமைக்க விரும்பியது. 2014 இல் கூட, என்சிபியை தனது கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சித்தது.


2014ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது நான் அங்கு இல்லை. ஆனால் அதை நான் அறிந்திருந்தேன். திடீரென்று, பாஜக, சிவசேனாவுடன் தனது உறவை சரிசெய்தது. அரசாங்கத்தில் சிவசேனா சேர்ந்தது. இதன் மூலம் பாஜகவை நம்புவது ஏற்புடையதல்ல என்பதை எங்கள் கட்சியின் தலைவர்கள் உணர்ந்தனர்" என்றும் சரத் பவார் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.


இந்த புத்தக வெளியிட்டு விழாவில்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி அளித்தார் சரத் பவார்.