கர்நாடகாவில் மே மாதம் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பழங்குடியினர் வாக்குகளை குறிவைத்து பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


பழங்குடியினர் வாக்குகளை குறிவைக்கும் பாஜக:


இந்நிலையில், பத்ம விருதுகளை பெற்ற ஹலக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த துளசி கவுடா, சுக்ரி பொம்மு கவுடா ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் 6.95 சதவிகித பழங்குடி மக்கள் உள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 15 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இச்சூழலில், கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த துளசி கவுடா, சுக்ரி பொம்மு கவுடா ஆகியோரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.


யார் இந்த துளசி கவுடா?


கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடாவுக்கு 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சமூகப் பணிக்காக துளசி கவுடாவுக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 30,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, கடந்த 60 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர் 74 வயதான துளசி கவுடா.


ஏழைக் குடும்பத்தில் பிறந்து, முறையான கல்வி கூட பெறாத துளசி கவுடா, 'வன கலைக்களஞ்சியம்' செல்லமாக அழைக்கப்படுகிறார். தாவரங்கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் பற்றிய அவரின் பரந்த அறிவு அனைவரையும் வியக்க வைக்கிறது.


யார் இந்த சுக்ரி பொம்மு கவுடா?


"சுல்க்ரஜ்ஜி" என்று அழைக்கப்படும் சுக்ரி பொம்மு கவுடா, கடந்த 2017ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். உத்தர கன்னடத்தின் ஹலக்கி பழங்குடியினரின் நைட்டிங்கேல் என்று அன்பாக அழைக்கப்படுகிறார். 86 வயதான இவர், பாடல்களின் களஞ்சியமாக திகழ்கிறார். திருமணம், பிறப்பு, பண்டிகை, அறுவடை, பிற சடங்குகள் உட்பட ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் இவர் பாரம்பரிய பாடல்களை பாடி அசத்துகிறார்.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, 1989 இல் கர்நாடக ஜனபத யக்ஷகானா அகாடமி விருது வழங்கப்பட்டது. 1998 இல் கர்நாடக ராஜ்யோஸ்தவா விருது, 1999 இல் ஜனபத அகாடமியின் ஜனபத ஸ்ரீ விருது உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.