உத்தரகாண்ட்  மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்தில் 228 கிலோ தங்கமானது மாயமாகிவிட்டதாக, உத்தரகாண்ட் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


225 கிலோ தங்கம் மாயம்:


மும்பையில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜோதிர்மத் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த், டெல்லியில் அடிக்கல் நாட்டப்பட்ட கேதார்நாத் கோயில் குறித்து  குற்றம் சாட்டினார், "கேதார்நாத்தில் தங்க மோசடி நடந்துள்ளது, அதை ஏன் எழுப்பவில்லை? ஊழல் செய்துவிட்டு, இப்போது டெல்லியில் கேதார்நாத் கட்டப்படுமா? கேதார்நாத்தில் இருந்து 228 கிலோ தங்கம் காணவில்லை, இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பியுள்ளார்.


உத்தரக்காண்ட் இமயமலையில் கேதார்நாத் கோயில் இருக்கும் போது, டெல்லியில் கேதார்நாத் கோயில் ஏன் என்றும் உத்தரகாண்ட் கேதார்நாத் கோயிலில் 225 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.






”துரோகத்தால் வீழ்த்தப்பட்டுள்ளார்”


மேலும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தது குறித்து தெரிவிக்கையில், உத்தவ் தாக்கரே துரோகத்தால் வீழ்த்தப்பட்டுள்ளார். அவர் மீண்டும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராகும் வரை மக்களின் துயரங்கள் குறையாது. துரோகத்தை செய்பவன் இந்து கிடையாது, ஆனால் துரோகத்தை பொறுத்துக் கொள்பவன் இந்து. மகாராஷ்டிரா மக்கள் துரோகத்தால் துயரத்தில் உள்ளனர். இது சமீபத்திய தேர்தலிலும் பிரதிபலித்துள்ளது என்றும் சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார்.


பாஜகவுக்கு எதிராக சங்கராச்சாரியார்?


சங்கராச்சாரியாரின் இந்த கருத்துக்கள் மட்டும் சர்ச்சையாகவில்லை. இதற்கு முன்பு, இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி தெரிவித்ததாக பாஜகவினர் கூறியதற்கு எதிராக, ராகுல் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்து ராகுல்காந்திக்கு ஆதரவாக பேசியிருந்தார். இதுமட்டுமன்றி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் அழைப்பை ஏற்க மறுத்தவர், மேலும் , மோடி பூஜை செய்ய, நாங்கள் அங்கு எதற்கு என கேள்வி எழுப்பியவர்.


இந்நிலையில், கேதார்நாத் குறித்தும் , உத்தவ் தாக்கரே குறித்துமான பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் , இவரின் கருத்தானது பாஜகவினருக்கு எதிரானதாகவே வெளிப்படுவதையும் பார்க்க முடிகிறது.