மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் 11 வயது சிறுமியை மைனர்கள் உள்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள்: இந்த நிலையல், மகாராஷ்டிராவில் சிறுமி உள்பட நான்கு பேர் சேர்ந்து மற்றொரு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிறுமி உள்பட நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.


சம்பவத்தை விவரித்த காவல்துறை தரப்பு, "குற்றவாளியாக கருதப்படும் சிறுமி, அம்பர்நாத்தில் உள்ள சிறுமியை அருகில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குதான், பிற குற்றவாளிகள் காத்திருந்தனர். அங்கு, ஆட்டோ ரிக்சாவில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார்.


இதுபற்றி யாரிடமும் பேசக்கூடாது என்று குற்றவாளிகள் சிறுமியை மிரட்டினர். ஆனால், அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து, தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறி இருக்கிறார் பாதிக்கப்பட்ட சிறுமி.


புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை: இதுகுறித்து அம்பர்நாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கலாஸ்கர் கூறுகையில், "18 வயது வந்த குற்றவாளிகள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மைனர்கள் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.


அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.