தன்பாலின திருமணத்தற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த வழக்கில் இரு நீதிபதிகள் ஒரே மாதிரியாகவும் மூன்று நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர். 


தன்பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:


ஐந்து நீதிபதிகளும், ஒரே விஷயத்தில் மட்டும் ஒரு மித்த கருத்தை தெரிவித்திருந்தனர். திருமணத்தில் சமத்துவம் கொண்டு வர சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என குறிப்பிட்டிருந்தனர். ஆனால், திருமண உரிமை, தத்தெடுப்பு உரிமை ஆகியவற்றில் வேறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர்.


உறவை ஏற்படுத்தி கொள்ள பால்புதுமையினருக்கு (Queer) அடிப்படை உரிமை உள்ளது என்றும் அவர்கள் செய்து கொள்ளும் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது அரசின் கடமை என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் ஒரே விதமான தீர்ப்பை வழங்கினர்.


ஆனால், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த பெரும்பான்மை நீதிபதிகள், "தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது. இதில் பல அம்சங்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியிருப்பதால் நாடாளுமன்றத்தால் மட்டும்தான் சட்ட அங்கீகாரம் வழங்க முடியும்" என தெரிவித்தனர். 


தன்பாலின தம்பதிகளுக்காக மீண்டும் குரல் கொடுத்த தலைமை நீதிபதி:


தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தன்பாலின தம்பதிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தன்பாலின தம்பதிகளுக்காக மீண்டும் குரல் கொடுத்துள்ள தலைமை நீதிபதி சந்திரசூட், தான் சொன்ன கருத்தில் உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டன் நகருக்கு சென்றுள்ள அவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டார்.


அப்போது, 'இந்தியா மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றங்களின் பார்வை' என்ற தலைப்பில் பேசிய அவர், "சில நேரங்களில் மனசாட்சியின் படியும் சில நேரங்களில் அரசியலமைப்பின் படியும் நடக்க வேண்டும் என நம்புகிறேன். மேலும் நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன்.


தன்பாலினத்தவர் உறவு கொள்வது குற்றம் இல்லை என தீர்ப்பு வழங்கியதை பொறுத்தவரையில் நாங்கள் பெரிய அளவில் முன்னேறியுள்ளோம். சமூகத்தில் சமமான பங்களிப்பாளர்களாக பால்புதுமையினரை அங்கீகரித்துள்ளோம். ஆனால், தன்பாலின தம்பதிகளின் திருமண உரிமைக்காக சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருகிறது. அமர்வில் உள்ள ஐந்து நீதிபதிகளின் ஏகோபித்த தீர்ப்பின் மூலம், இந்த முடிவை எடுத்தோம். 


திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையின் கீழ்தான், துணையை தேர்வு செய்து கொள்வதற்கான உரிமையும் அந்த திருமணத்தை அங்கீகரிப்பதற்கான உரிமையும் வருகிறது. இம்மாதிரியான உறவுகளை அங்கீகரிக்க மறுப்பது பால்புதுமையினருக்கு எதிரான பாகுபாடாக அமைந்துவிடும். ஒருவரின் பாலினத்தின் அடிப்படையில் மட்டுமே திருமணத்தை வரையறுக்க முடியாது" என்றார்.