கடந்த 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். ஜனவரி 5ஆம் தேதி வரை தொடர்ந்த இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரும் அப்பாவி ஒருவரும் கொல்லப்பட்டனர். 


ஆரம்பத்தில், இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பொறுப்பேற்றபோதிலும், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களே, இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பயங்கரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.


பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி:


பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஷாஹித் லத்தீப் இன்று அடையாளம் தெரிய மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சியால்கோட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவராக இருப்பவர்.


இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, "மசூதிக்குள் லத்தீப் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். இந்த தாக்குதலில் மேலும் ஒரு ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்" என்றார்.


இவர், சியால்கோட் நகரில் உள்ள நூத் மசூதியில் முல்லாவாக பணியாற்றி வந்துள்ளார். பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய 4 பயங்கரவாதிகளுக்கு, லத்தீப்தான் வழிகாட்டி வந்துள்ளார்.


பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்:


கடந்த 1994ஆம் ஆண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு, தண்டனை முடிந்தவுடன், வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். 41 வயதான இவர், 2010ஆம் ஆண்டு இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார்.


பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம், கராச்சியில் லஷ்கர் அமைப்பின் முப்தி கைசர் ஃபரூக் மற்றும் ஜியாவுர்-ரஹ்மான் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம், ராவல்பிண்டியில் ஹிஸ்புல் அமைப்பின் தளபதி பஷீர் அகமது பீர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் கடந்த 18 மாதங்களில் மேலும் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்திய, பாகிஸ்தான் உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.


இதையும் படிக்க: Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!