Shah Rukh Khan Speech: "பன்முகத்தன்மையுடன் இருப்பது ஒரு நல்ல விஷயம், பிளவுபடுத்துவது இல்லை. கலைக்கு மதம் இல்லை என்பது போல, நம் நாட்டுக்கு மதம் இல்லை, அனைத்தும் ஒன்றிணைந்ததுதான் என பாலிவுட் நடிகர் சாருக் கான் தெரிவித்துள்ளார்.
”பன்முகத்தன்மை நல்லது”
பாலிவுட் நடிகரான சாருக் கான், இந்திய நாடு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது,
இந்திய நாட்டில் 1,600 மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு 10 அல்லது 15 கிலோமீட்டருக்கும் பேச்சு வழக்குகள் மாறுகின்றன. இங்கு எத்தனை நூற்றுக்கணக்கான மதங்கள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியவில்லை. இந்தியாவுக்கு மதம் என்பது இல்லை. எல்லாம் இணைந்ததுதான் இந்தியா என நான் நினைக்கிறேன். பன்முகத்தன்மையுடன் இருப்பது ஒரு நல்ல விஷயம், பிளவுபடுத்துவது இல்லை.
”இந்தியா - ஓவியம்”
"இந்தியா ஒரு அழகான ஓவியம் போன்றது. பல வண்ணங்கள் சேர்ந்து ஓவியமாக உருவாகி, அழகாக காட்சியளிக்கின்றன. ஓவியத்தில் இருந்து இந்த நிறம் மற்றொன்றை விட சிறந்தது என்று கருதினாலும் அல்லது நீங்கள் ஒரு நிறத்தை எடுத்து விட்டாலும், அது ஒரு ஓவியமாக இருக்காது ( ஓவியம் உருவாகாது ) என தெரிவித்திருக்கிறார்.
பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள் உள்ளிட்ட பல வேறுபாடுகள் ஒன்றிணைந்துதான் இந்திய நாடு என்றும் இத்தனை வேறுபாடுகள்தான் இந்தியாவை ஓவியம் போல அழகாக காட்சி அளிக்கிறது. இத்தனை வேறுபாடுகளை வைத்து மக்களை பிரிப்பது நல்லது இல்லை என்ற பொருள் கொள்ளும் வகையில் ஷாருக்கான் பேசியிருக்கிறார்.
அவர் பேசியது 2019 ஆம் ஆண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி மதம் குறித்து பேசிய நிலையில், மீண்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பேசு பொருளாகியுள்ளது.