ஹிஜாப் சர்ச்சை.. சமீப நாட்களாக நம் இளம் சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது ஹிஜாப் சர்ச்சை.


கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரி தான் சர்ச்சையின் பிறப்பிடம். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்துவர இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சில மாணவிகள் முடியாது என்று எதிர்க்குரல் எழுப்ப போராட்டம் பெரிதானது. ஹிஜாப் எங்கள் அரசியல் சாசன உரிமை என்ற அந்தப் பெண்கள் முழங்க, இன்னொரு தரப்பினர் காவித் துண்டு, நீலத் துண்டுடன் கல்லூரிகளுக்கு வர ஆரம்பித்தனர். நிலவரம் பதற்றமடைய அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழலில் விவகாரம் கர்நாடக ஐகோர்ட்டை எட்டியது. நீதிமன்ற இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பள்ளியில் யாரும் எவ்வித மத அடையாள உடையையும் அணியக் கூடாது, முழு சீருடையுடன் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. திங்கள் கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள சூழலில் உச்ச நீதிமன்றமும் இதனை தேசிய சர்ச்சையாக்கக் கூடாது என்று கூறி ஹிஜாப் வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க மறுத்துவிட்டது. 


இந்நிலையில், பாஜக ஆதரவாளரான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இவ்விவகாரம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதனின் கருத்தைப் பர்கிர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் நீங்கள் துணிச்சலைக் காட்ட நினைத்தால் ஆப்கானிஸ்தானில் புர்கா அணியாமல் துணிச்சலைக் காட்டுங்கள். விட்டுவிடுதலையாக நினையுங்கள், உங்களையே சிறைப்படுத்திக் கொள்ளாதீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.


இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் நடிகை சபனா ஆஸ்மி, நான் தவறாக சொன்னால் என்னைத் திருத்துங்கள். எனக்குத் தெரிந்து ஆப்கானிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. இந்தியா இப்போதுவரை மதச்சார்பற்ற ஜனநாயக நாடு?!! என்று பதிவிட்டுள்ளார்.






முன்னதாக சபானா ஆஸ்மியின் கணவரும் பிரபல கவிஞருமான ஜாவேத் அக்தார், நான் எப்போது ஹிஜாப், புர்கா என எதற்கும் ஆதரவாக இருந்ததில்லை. இருந்தாலும், சிறு பெண்களின் குழுவை ரவுடிகள் போல் விரட்டியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மிரட்டலுக்கு அந்தப் பெண்கள் அஞ்சவில்லை. இருப்பினும் இவர்கள் ஆண்மை குறித்து என்ன நினைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்தோ பரிதாபம்.


மதச்சார்பற்றவர்கள் ஹிஜாப், புர்காவை எதிர்த்தால் அதில் அர்த்தமிருக்கும். தோளில் காவித்துண்டு உள்ளோர் அதை செய்யக்கூடாது. இவர்கள்தான் மங்களூருவில் உணவகத்தில் காபி குடித்த இந்துப் பெண்களையும் அடித்தார்கள் என்பதை நினைவில் கொள்வோம் என்று பதிவிட்டிருந்தார்.