கடந்த சில நாள்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையில், விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் லக்னோவில் இருந்து மும்பை சென்ற ஆகாசா ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இன்று இயக்க திட்டமிடப்பட்டிருந்த சில விமானங்களுக்கு இன்று பாதுகாப்பு எச்சரிக்கைகள் கிடைத்துள்ளன.
தொடரும் பதற்றம்:
ஆகாசா ஏர் அவசரகால குழுக்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதில் ஆகாசா ஏர் குழுக்கள் தயாராக உள்ளன" என்றார்.
கர்நாடகாவின் பெலகாவி விமான நிலையத்துக்கு நேற்றும், இன்றும் இரண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளன. காவல்துறையினரும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விமான நிலையத்தை சோதனையிட்ட பின்னர் அது தவறான தகவல் என உறுதி செய்யப்பட்டது.
கடந்த வாரத்தில், டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானம், தம்மம் - லக்னோ இண்டிகோ விமானம், அயோத்தி-பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்காவிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் (SG116), பாக்டோக்ரா பெங்களூரு (QP 1373) அலையன்ஸ் ஏர் விமானம், அமிர்தசரஸ்-டேராடூன்-டெல்லி விமானம் (9I 650), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 684), மதுரை - சிங்கப்பூர் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
விமானத்தில் செல்வோர் உஷாா்:
இரண்டு இண்டிகோ மற்றும் ஒரு ஏர் இந்தியா விமானத்திற்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையிலிருந்து நியூயார்க்கின் JFK விமான நிலையத்திற்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் AI119, மஸ்கட் செல்லும் இண்டிகோ விமானம் 6E1275, ஜெட்டாவுக்குச் செல்லும் 6E56 விமானம் ஆகிய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த மாதம், டெல்லி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அது பொய்யான தகவல் என்பது கண்டறியப்பட்டது.