கடந்த 2023ஆம் ஆண்டுக்கான 5வது தேசிய நீர் விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை மறுநாள் வழங்க உள்ளார். ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர் ஆதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை, கடந்த 14ஆம் தேதி, 5வது தேசிய நீர் விருதுகளை அறிவித்தது.


தேசிய நீர் விருதுகள்:


சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம பஞ்சாயத்து, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழில்துறை, சிறந்த நீர் பயனர் சங்கம், சிறந்த நிறுவனம் (பள்ளி அல்லது கல்லூரி தவிர), சிறந்த சிவில் சமூகம் என 9 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.


சிறந்த மாநிலம் என்ற பிரிவில், ஒடிசாவுக்கு முதல் பரிசு வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தையும், குஜராத் மற்றும் புதுச்சேரி கூட்டாக மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. ஒவ்வொரு விருது வென்றவருக்கும் ஒரு சான்றிதழும் கோப்பையும், சில பிரிவுகளில் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.


பிரதமரின் வழிகாட்டுதல்படி, ஜல் சக்தி அமைச்சகம் தேசிய அளவில் நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பரவலாக்க விரிவான இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையிலிருந்து , தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறந்த நீர் பயன்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க மக்களை ஊக்குவிக்கவும், முதலாவது தேசிய நீர் விருதுகள் 2018-ல் தொடங்கப்பட்டது.


தொழிற்சாலைகள் பிரிவில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த விருது:


கடந்த 2019, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 2வது, 3வது மற்றும் 4வது தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டன. கொரோனா தொற்றுநோய் காரணமாக 2021ஆம் ஆண்டு விருதுகள் வழங்கப்படவில்லை.


‘நீர் வள இந்தியா’ என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நல்ல பணிகள் மற்றும் முயற்சிகள் மீது தேசிய நீர் விருதுகள் கவனம் செலுத்துகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சிறந்த நீர் பயன்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க ஊக்குவிப்பதற்காகவும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


சிறந்த தொழிற்சாலை பிரிவில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அப்போலோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 2ஆவது பரிசு வழங்கப்பட்டுள்ளது.