Wayanad Bypoll: வயநாடு மக்களவத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக, நவ்யா ஹரிதாஸ் என்பவரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
வயநாடு இடைத்தேர்தல் 2024:
கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட, நவ்யா ஹரிதாஸை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியல் மூலம் அவரது வேட்பாளரை அக்கட்சி உறுதியளித்துள்ளது.
யார் இந்த நவ்யா ஹரிதாஸ்?
39 வயதான நவ்யா ஹரிதாஸ், 2007 ஆம் ஆண்டு காலிகட் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கேஎம்சிடி பொறியியல் கல்லூரியில் பி.டெக் பட்டம் பெற்றார். தொழிலில் சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், தற்போது பாஜகவின் மகிளா மோர்ச்சாவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார் என அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நவ்யா ஹரிதாஸ் முன்பு 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கோழிக்கோடு கூட்டுறவு கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் நவ்யா 24,873 வாக்குகள் பெற்றார். அந்த டதொகுதியில் இந்திய தேசிய லீக்கின் அகமது தேவர்கோவில் 52,557 வாக்குகள் பெற்று 12,459 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நூர்பீனா ரஷீத்தை தோற்கடித்தார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) படி, நவ்யா ஹரிதாஸ் மீது குற்ற வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது பாஜக மகிளா மோர்ச்சாவில் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஏடிஆர் படி, நவ்யா ஹரிதாஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,29,56,264 ஆகும். அவர் ரூ.1,64,978 கடன் வைத்திருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
வயநாடு இடைத்தேர்தல் ஏன் முக்கியம்?
வயநாடு தொகுதி காங்கிரஸ், பாஜக மற்றும் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க கௌரவப் போரைப் பிரதிபலிக்கிறது. தொகுதியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும், வெற்றி வாகை சூட ஆளுங்கட்சியும் தீவிர முனைப்பு காட்டுகிறது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாலும், அந்த தொகுதிக்கான எம்.பி., பதவியை ராஜினாமா செய்து ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். இதனால் காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கும் ராகுல் காந்தியை போன்றே பிரமாண்ட வெற்றியை ஈட்டி தர காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்ற தொடங்கியுள்ளனர். பிரியங்கா காந்தி மக்கள் பிரதிநிதி பதவிக்காக போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவருக்கு வெற்றி கிட்டுமா என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.