Delhi-Jammu Highway Accident: ஹரியானாவில் மினி பேருந்தும் டிரக்கும் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி:


வெள்ளிகிழமை அதிகாலையில், டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு,  புனித யாத்திரை செல்வதற்காக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மினி பேருந்தி பயணித்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் தாக்கத்தில் பேருந்தின் முன்பகுதி சிதைந்துள்ளதை சம்பவ இடத்திலிருந்து வெளியாகியுள்ள காட்சிகள் காட்டுகின்றன.






20 பேர் படுகாயம்:


விபத்தில் படுகாயமடைந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரக்கின் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், ஆனால் அவரது வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், பயணிகளில் பெரும்பாலானோர் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதில் வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்தவர்கள் தான் பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதையும் படியுங்கள்: Financial Plan: கையில் காசே இல்லை என்ற நிலை வரக்கூடாதா? இதோ உங்களுக்கான எளிதான 7 டிப்ஸ்..!


விபத்து நடந்தது எப்படி?


உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இருந்து குடும்பத்துடன் சென்ற பேருந்து அம்பாலா அருகே டிரக் மீது மோதியது. நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பேருந்துக்கு முன்னாள் சென்ற டிரக் திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டது. பேருந்து ஓட்டுனரால் உடனடியாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததால், டிரக்கின் பின்புறத்தில் சென்று மோதியுள்ளது.


இதனிடையே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த தீரஜ் என்பவர் பேசுகையில், "டிரக்கின் முன்னாள் சென்ற ஒரு கார் திடீரென்று பெட்ரோல் பங்கை நோக்கி திரும்பியது. இதன் காரணமாக டிரக் ஓட்டுனர் தனது வாகனத்தின் பிரேக்கை அழுத்தினார். அப்போது நாங்கள் பயணித்தபேருந்து அதன் பின்னால் இருந்தது. சரியான நேரத்தில் அதனை நிறுத்த முடியவில்லை. இதனால் இந்த கோர விபத்து நிகழ்ந்தது" என்று தெரிவித்துள்ளார்.