சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 


சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் இந்தாண்டு இறந்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.அப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரி பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பஸ்தார், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இந்த அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். 


நேற்று காலை 11 மணியளவில் இந்த அதிரடி ஆபரேஷன் தொடங்கியது. தண்டேவாடா அதிரடிப்படையினர் 5 பேரின் உடல்களையும், நாராயண்பூர் அதிரடிப்படையினர் 2 பேரின் உடலையும் கைப்பற்றினர். மாவோயிஸ்டுகளின் அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.  சத்தீஸ்கரின் பஸ்தர், தண்டேவாடா, சுக்மா, பிஜாப்பூர், கொண்டகான் மற்றும் நாராயண்பூர் ஆகிய மாவட்டங்கள் மாவோயிஸ்ட்களின் புகலிடமாக திகழ்கிறது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் ஒரே நாளில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.