உணவகங்களில் சேவை கட்டணம் (சர்வீஸ் சார்ஜ்) என்பது வாடிக்கையாளரே விரும்பி கொடுப்பது தானே தவிர அவர்களிடம் கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ராஜசேகர் என்ற வழக்கறிஞர் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் இயங்கி வரும் ஒரு உணவகத்திற்கு தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது உணவுக்கான தொகையாக, சேவைக் கட்டணம் 164.95 ரூபாய் உள்பட 3,543 ரூபாய் வந்துள்ளது. இதனை ஏற்க மறுத்த வழக்கறிஞர் ராஜசேகர், சேவை கட்டணத்தை பில்லில் இருந்து எடுக்குமாறும் அதை தான் டிப்ஸாக கொடுத்து விடுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.  ஆனால், அப்படி செய்வதற்கு தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அப்படி செய்தால் தனது வேலை போய் விடும் என்றும் கூறி உணவகப் பணியாளர் மறுத்துள்ளார். எனினும், மத்திய அரசு வழங்கியுள்ள சேவைக்கட்டணம் தொடர்பான விதிமுறைகளை உணவக நிர்வாகத்திடம் காண்பித்துள்ளனர். ஆனாலும் அதை ஏற்க மறுத்த உணவ நிர்வாகம் முழு தொகையையும் கட்ட வலியுறுத்தியுள்ளது. சேவைக்கட்டணம் உள்பட, பில் தொகையைக் கொடுத்த ராஜசேகர் செப்டம்பரில் உணவக நிர்வாகத்திற்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 




ஆனால், நோட்டீசுக்கு நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காததால், உணவகம் சட்டவிரோதமான முறையில் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு புகார் அளித்தார். இதனை விசாரித்த நுகர்வோர் ஆணையம், அந்த உணவகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது. 2.5% சிஜிஎஸ்டி மற்றும் 2.5% எஸ்ஜிஎஸ்டி வசூலித்தது மட்டுமல்லாமல் அதனுடன் சேர்த்து 5% சேவைக்கட்டணத்தை வசூலித்ததையும் உறுதி செய்தது. இதனையடுத்து சேவைக்கட்டணம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் தான் வசூலிக்க வேண்டுமே தவிர இனி கட்டாயமாக வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட்டதோடு,  சேவைக்கட்டணமாக வசூலித்த 164.95 ரூபாயை திருப்பித்தர உத்தரவிட்டதோடு, 2000 ரூபாய் மற்றும் வழக்கிற்கு ஆன செலவு 1000 ரூபாய் சேர்த்து 3,164.95 ரூபாயை வழங்க உத்தரவிட்டது.




இது போன்று தொடர் புகார்கள் வந்ததையடுத்து, சேவைக்கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு கொடுப்பது தானே தவிர அதை கட்டாயம் வசூலிக்கவேண்டும் என்று சட்டத்தில் எங்கும் கூறவில்லை என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சேவைக்கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு வந்த புகார்கள் மற்றும் செய்திகளில் வெளியான புகார்களை கவனத்தில் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இது தொடர்பாக தேசிய உணவக சங்கங்களுடன் வரும் ஜூன் 2ம் தேதி ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக உணவக சங்கங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உணவகங்கள் 5-10% சேவைக்கட்டணத்தை விருப்பத்தின் பேரில் வசூலிப்பதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றன. சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வாடிக்கையாளர்கள் அந்த கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். மறுப்பவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


இந்தப் பிரச்சினை தினசரி அடிப்படையில் நுகர்வோரை பெருமளவில் பாதிக்கிறது என்றும், இந்த பிரச்சனை நுகர்வோரின் உரிமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருப்பதால், அதை தீவிரமாக ஆய்வு  செய்வது அவசியம் என்று கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.


2017ல் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ள நுகர்வோர் துறை, வாடிக்கையாளர் உணவகத்திற்குள் வந்துவிட்டாலே அவரிடம் சேவைக்கட்டம் வசூலிக்கலாம் என்பதாக அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளது.  வாடிக்கையாளர்கள் மெனுவில் உள்ள விலையையும் அதற்கான வரியையும் சேர்த்து செலுத்த வேண்டுமே தவிர அவர்களிடம் அது தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது என்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான வர்த்தக நடைமுறை என்று எச்சரித்துள்ளது. அப்படி இது போன்று எந்த உணவகமாவது கட்டாயப்படுத்தி வசூலில் ஈடுபட்டால் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடலாம் என்று தேசிய நுகர்வோர் விவகாரங்கள் துறை வலியுறுத்தியுள்ளது.