புதிய தடுப்பூசிக்கு அனுமதி கோரும் சீரம் நிறுவனம்:


புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலின்படி, 18 வயதானவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஆக செலுத்தும் வகையில் கோவோவாக்ஸ் தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் அல்லது கோவாக்சினில் ஏதேனும் ஒன்றில் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், கோவோவாக்ஸ் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸ் ஆக செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய தடுப்பூசி என்ன செய்யும்?


கோவோவேக்ஸ் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி ஆகும். அமெரிக்காவை சேர்ந்த நோவோவாக்ஸ் நிறுவனத்தால்  கோவோவேக்ஸ் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு, உள்நாட்டில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்த சீரம் நிறுவனத்தின் லைசன்ஸின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து,  SARS-CoV-2 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வளர்ப்பது என்பதை மனித உடலுக்குப் பழக்கப்படுத்த, ஸ்பைக் புரதங்களைப் பயன்படுத்தும் ஒரு மறுசீரமைப்பு புரத தடுப்பூசி ஆகும்.


உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்:


 கொரோனா வைரஸின் மாறுபாடுகளால் ஏற்படும் பயத்தை எதிர்கொள்ள, கோகோவாக்ஸ் தடுப்பு மருந்தை பூஸ்டர் ஷாட் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என, கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பால் ஒப்புதல் வழங்கப்பட்டது. தடுப்பூசி இன்றி தவித்த பல ஏழை நாடுகளுக்கு, இந்த தடுப்பூசி அதிகளவில் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடி அறிவுரை:


சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில், புதிய BF.7 வகை கொரோனா பரவல் தொடர்பாக டெல்லியில் உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆக்ஸிஜன் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கினார். 


தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தல்:


முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மண்ச்க் மாண்டவியா,  சீனாவில் கொரொனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், புதிய  கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை தோராயமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான், சீரம் நிறுவனம் தனது புதிய பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.