இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சூழலில் கொரோனா பரவல் என்பது ஆபத்தானது எனும் சூழலில் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதேநேரம், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதை விட வருமுன் காப்பதே சாலச்சிறந்தது. எனவே கொரொனா பரவல் அதிகரிப்பை தடுக்க, பொதுமக்கள் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.


 


அதன்படி, 



  • பொதுஇடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்

  • தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்

  • சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அல்லது சானிடைசர் மூலம் அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும்

  • திருமணம், அரசியல் மற்றும் சமூக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்

  • உலக நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கலாம்

  • காய்ச்சல், வறண்ட தொண்டை, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகலாம்

  • முடிந்த அளவிற்கு விரைந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுங்கள்

  • சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது அரசு வழங்கும் அறிவுரைகளை பின்பற்றுங்கள் 


என இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.


 


நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்:


இதனிடையே, பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மண்சுக் மாண்டவியா மக்களவையில் உரையாற்றினார். அப்போது, கடந்த சில நாட்களில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காண்கிறோம். சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு, அங்கு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை காண முடிகிறது.


கொரோனா தொற்றை நிர்வகிப்பதில் சுகாதாரத் துறை மிகவும் முனைப்பாக உள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. மாநில அரசுகளுக்கு இதுவரை , 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.


மாஸ்க் அணிய வலியுறுத்தல்:



உலகளவில் தொற்று பரவல் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனா தொற்றின் புதிய மாறுபாட்டை சரியான நேரத்தில் அடையாளம் காண மரபணு வரிசைமுறை சோதனையை  அதிகரிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தை அடுத்து, மக்கள் மாஸ்க் அணிவதையும், சானிடைசர்களைப் பயன்படுத்துவதையும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளோம்.


மத்திய அரசு முனைப்பு:



நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடையே ரேண்டம் முறையில்  RT-PCR முறையில் மாதிரிகளை சேகரிக்க தொடங்கியுள்ளோம். கொரோனா தொற்றுநோயை முறையாக கையாள அரசு உறுதிபூண்டுள்ளோம், அதற்கான  உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.