சமீபத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இந்த விவகாரத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த அண்ணாமலை, "தான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து செய்யப்பட்டது. தயாரிக்கப்பட்ட 500 வாட்ச்களில் 149வது வாட்ச் தன்னுடையது" என்றார்.
வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த வாட்ச்சை கட்டிக்கொண்டு, தான் ஒரு தேசியவாதி என அண்ணாமலை கூறியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
தற்போதைய சூழலில், தேசியவாதம் பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, அரசை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரையும் தேசவிரோதிகள் என முத்திரை குத்துகின்றனர். அதுமட்டும் இன்றி, சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்து அவதாறு கருத்து பரப்பப்படுகிறது.
இம்மாதிரியான விமர்சனங்களுக்கு முதன்மை இலக்காக இருப்பவர் முன்னாள் பிரதமர் நேரு. காஷ்மீர், சீன விவகாரங்களை முன்வைத்து அவரை கடுமையாக விமர்சிக்கும் போக்கு இருந்து வருகிறது. ஆனால், தொலைநோக்கு கொண்டு யோசித்து, இந்தியாவிற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியவர் நேரு.
அவர் எந்தளவுக்கு தொலைநோக்குடன் யோசித்தார் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. அப்போது, நாட்டின் பிரதமராக நேரு பொறுப்பு வகித்தபோது, அவருக்கு ஒரு ஸ்விஸ் வாட்ச் பரிசளிக்கப்பட்டது. இது போன்ற வாட்சை இந்தியாவில் தயாரிக்க முடியுமா என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார்.
இதுபற்றி அவர் பலரிடம் விசாரித்தார். ஆனால், பாசிட்டிவான பதில் கிடைக்கவில்லை. அதற்குப் பின் நேரு தலைமையிலான அரசு ஜப்பானின் சீக்கோ நிறுவனத்திடம் வாட்ச் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற முயற்சித்தது. ஆனால், தோல்வியே பரிசாக கிடைத்தது.
ஆனால், சீக்கோவின் போட்டி நிறுவனம் இந்தியாவுக்கு உதவ முன் வந்தது. தொழில்நுட்பத்தை அளித்ததோடு நின்று விடாமல் இந்தியர்களுக்கு வாட்ச் தயாரிக்கத் தேவையான பயிற்சியையும் அளித்தது.
இதன் விளைவாக, 1961 ஆம் ஆண்டு பெங்களூரிலிருக்கும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) என்கிற பொதுத் துறை நிறுவனத்தில் வாட்ச் தயாரிக்கும் பிரிவு துவங்கப் பட்டது. அந்தப் பிரிவைத் தொடங்கி வைத்த நேரு சில ஆண்டுகளுக்குள் HMTயின் முதல் தயாரிப்பான HMT Janata வாட்ச் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
அதற்குப் பின் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அதே தொழிற்சாலையில் வாட்ச் தயாரிக்கும் இரண்டாவது பிரிவும் தொடங்கப்பட்டது. ஸ்ரீநகரிலும் அதன் ஒரு பிரிவு தொடங்கப்பட்டது. விரைவில், ஹெச்எம்டி வாட்சுகள் இந்தியாவின் சுயசார்புக் கொள்கையின் சின்னமாயின.
ஒரு வாட்ச்சை வைத்து, இந்தியாவின் சுயசார்பு கொள்கைக்கு வலுவான அடித்தளம் அமைத்த நேருவை, வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த வாட்ச்சை அணிந்து கொண்டு தான் ஒரு தேசியவாதி என சொல்பவர்கள் விமர்சிப்பதுதான் காலத்தின் கொடுமை.