இந்திய சீரம் நிறுவனம் விரைவில் கோவிட் தடுப்பூசிகளைக் `கோவாக்ஸ்’ நாடுகளுக்கு விநியாகிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற நாடுகளுக்குக் கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, இன்று முதல் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பிற நாடுகளுக்கு அனுப்புவதாக சீரம் நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. 


`சீரம் நிறுவனத்தின் பூனே மையத்தில் இருந்து நேபாள் நாட்டிற்குச் செல்ல வேண்டிய தடுப்பூசிகள் அடங்கிய முதல் பெட்டி இன்று அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் வெவ்வேறு காரணங்களால் அது தடைப்பட்டு, அடுத்த 2 அல்லது 3 நாள்களில் நடைபெறும்’ என சீரம் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்தத் தடுப்பூசிகள் நேபாளுக்குச் சரியாக எப்போது ஏற்றுமதி செய்யப்படும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 



கடந்த ஆண்டு, சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்குத் தடுப்பூசி விநியோகம் செய்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்தது. எனினும் கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவில் ஏற்பட்ட கோவிட் தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பிற நாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டது. 






கடந்த வாரம், சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இந்திய மாநிலங்களில் சுமார் 200 மில்லியன் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் என்ற முறையில், இந்திய சீரம் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 120 மில்லியனுக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், சீரம் நிறுவனத்தின் பூனே மையத்தில் சுமார் 150 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



`கோவாக்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச அளவில் கோவிட் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்குத் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனை இந்திய சீரம் நிறுவனம் பின்பற்றி, கோவாக்ஸ் நாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாகத் திட்டமிட்டுள்ளது. `கோவாக்ஸ்’ நாடுகளின் பட்டியலில் 184 நாடுகள் இருக்கின்றன.