இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது. போலியான வாடிக்கையாளர் சேவை எண்களில் இருந்து தொலைபேசியில் அழைக்கப்பட்டு ஏமாறாமல் இருக்கும் விதமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கை கூறியுள்ளது. மேலும், ஆன்லைன் மோசடியாளர்களிடம் இருந்து தங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. 


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவுரையின் படி, எஸ்.பி.ஐ வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் என்ற பெயரில் வரும் புதிய தொலைபேசி எண்களிடம் இருந்து பாதுகாக்க இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சரியான வாடிக்கையாளர் சேவை எண்களைச் சரிபார்க்க வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.



`போலியான வாடிக்கையாளர் சேவை எண்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள். சரியான வாடிக்கையாளர் சேவை எண்களுக்காக எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தைப் பார்வையிடவும். வங்கி தொடர்பான ரகசிய தகவல்களை யாரிடம் பகிராதீர்கள்’ என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் இந்த ட்வீட்டில், சைபர் கிரிமினல்கள் எப்படி வாடிக்கையாளர்களின் மிகச் சிறிய தவறுகள் கூட வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைத் திருடப் பயன்படும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு விளக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 


 






ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடி, சைபர் க்ரைம் முதலான சட்ட விரோத நடவடிக்கைகளின் மூலமாக பணம் திருடப்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள், போலி ஃபோன் கால் முதலானவை குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


சமீபத்தில் வங்கிப் பரிவர்த்தனைகளில் மோசடி ஏற்படுவதைத் தடுக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில், ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது, செல்போன் எண்ணுக்கு ஓடிபி பாஸ்வேர்ட் அனுப்பபப்ட்டு, அதன்மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.