கர்நாடக மாநில முதலமைச்சர் யார் என்பது இன்று அல்லது நாளை உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஷ்வரா கூறியுள்ளார். 






கர்நாடக தேர்தலில் மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்திருந்தாலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகள் 13ஆம் தேதி வெளியாகின. இதில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை கைப்பற்றி மிக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது.


இதையடுத்து, ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது காங்கிரஸ். அந்த வகையில், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி தலைமையிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது. இது போன்ற சூழலில் இன்று சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தனித்தனியே சந்தித்தனர்.


போட்டியில் இறங்கும் லிங்காயத் மற்றும் பட்டியலின சமூகத்தினர்: 


காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்கு மிக முக்கிய காரணம் லிங்காயத் சமூகத்தினர். கர்நாடகாவில் அரசியல் ரீதியாகவும் எண்ணிக்கையின் ரீதியாகவும் செல்வாக்கு மிக்க சாதி பிரிவான லிங்காயத்தினர், பாரம்பரியமாக, பாஜகவுக்கு வாக்களித்து வந்தனர்.


ஆனால், லிங்காயத் சமூகத்தினர், இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால் லிங்காயத்தினர், தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே முதலமைச்சர் பதவி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  அதேபோல்   லிங்காயத் சமூகத்தினரை போலவே, பட்டியலின சமூகத்தினரும் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


 முதல்வர் தேர்வில் குழப்பம் இல்லை: 






இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில், “காங்கிரசுக்கு வாக்களிக்கும் பட்டியலின மக்கள் பிரதிநிதித்துவம் கேட்பது இயல்பு. கட்சி மேலிடத்தில் உள்ள அனைவருக்கும் என்னைத் தெரியும். பரமேஸ்வராவை முதலமைச்சர் ஆக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால், அதை அவர்கள் செய்வார்கள். என் தரப்பில் நான் அழுத்தம் தர மாட்டேன். கர்நாடக முதல்வர் தேர்வில் எந்த சர்ச்சையும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். முதல்வர் தேர்வில் ஒருசில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. முதல்வர் வேட்பாளர்களை கட்சி மேலிடம் சந்தித்து வருகிறது, முதல்வர் யார் என்பது இன்று அல்லது நாளை இறுதி செய்யப்படும்” என கூறியுள்ளார்.