சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்காக இந்தியாவை விமர்சித்த மத சுதந்திரம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்தது.
அமெரிக்க அரசால் நடத்தப்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவின் அரசு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மத சுதந்திர அலுவலகத்தின் தூதர் ரஷாத் ஹுசைன் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், "ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் சவுதி அரேபியா உட்பட பல அரசாங்கங்கள் தொடர்ந்து மதங்களை பின்பற்றும் மக்களை தங்கள் எல்லைகளுக்குள் எளிதாக தாக்கி வருகின்றன” என குறிப்பிட்டார். இந்தியா பற்றிய இந்த அறிக்கை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) மிகவும் சவாலானதாக அமைந்துள்ளது, பா.ஜ.க பற்றி அந்த அறிக்கையில் சுமார் 28 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விஸ்வ இந்து பரிஷத் (VHP) பற்றி 24 முறையும், பஜ்ரங் தளம் பற்றி 7 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்களால் கூறப்படும் வெறுப்புவாத பேச்சுகள் மற்றும் பிளவை உண்டாக்கும் அறிக்கைகள் ஆகியவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக “பாஜகவை சேர்ந்த ஹரிபூஷன் தாக்கூர் பச்சால், இஸ்லாமியர்கள் தீ வைத்து எரிக்கப்பட வேண்டும் என பேசியது, கேரளாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.சி. ஜார்ஜ், இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சாப்பிடக்கூடாது என்ற கூற்று, மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கியான் தேவ் அஹுஜா இஸ்லாமியர்களை ஹிந்துக்கள் கொல்ல வேண்டும் என கூறப்பட்ட அனைத்தும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஏராளமான மத வன்முறைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தலில் வெற்றி பெற்றால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என பேசியதும் இடம்பெற்றுள்ளது.
சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்காக இந்தியாவை விமர்சித்த மத சுதந்திரம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இதுபோன்ற அறிக்கைகள் தவறான தகவல் மற்றும் தவறான புரிதலின் அடிப்படையில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார். சில அமெரிக்க அதிகாரிகளின் உந்துதல் மற்றும் பாரபட்சமான வர்ணனை இந்த அறிக்கைகளின் நம்பகத்தன்மையை மேலும் குறைத்து மதிப்பிட உதவும் என தெரிவித்தார்.