உயிர்க்கொல்லியான புற்றுநோய்க்கான பல்வேறு காரணங்களில் புகைப்பிடிக்கும் பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது.  அதனை கட்டுப்படுத்தும் விதமாக, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஒற்றை சிகரெட் விற்பதை தடுக்க, சட்டம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. பெட்டியாக இல்லாமல் ஒரே சிகரெட் மற்றும் கட்டப்படாத புகையிலைப்பொருட்கள் ஆகியவற்றை, ஏழை மக்கள் மற்றும் இளைஞர்கள் எளிதாக  வாங்கும் சூழல் நிலவுகிறது. அதோடு, இந்தியாவில் புகைபிடிப்பவர்களில் பெரும்பலானவர்கள் முழு பெட்டியாக அல்லாமல் ஒற்றை சிகரெட்களையே அதிகளவில் வாங்குகின்றனர். இதன் காரணமாக, பல இளைஞர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். 


 


இந்நிலையில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் சில்லறை விற்பனையை தடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில், நாட்டில் ஒற்றை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்துள்ளது. மேலும் புகை பிடிக்கும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் புகைபிடிக்கும் பகுதிகளை மூடவும் குழு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பொதுபட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


 


அனைத்து புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரிப்பது, மத்திய அரசின் உடனடி வருவாயை உயர்த்துவதற்கான மிக பயனுள்ள கொள்கை நடவடிக்கையாக இருக்கும். வருவாயை ஈட்டுவதற்கும் புகையிலை
பயன்பாடு மற்றும் அதுதொடர்பார்பான நோய்களைக் குறைப்பதற்கும் இது ஒரு வெற்றிகரமான முன்மொழிவாக இருக்கும் என கருதப்படுகிறது. மத்திய அரசின் புதிய நடவடிக்கையால் குறைந்த விலையில் இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைப்பது தடை செய்யப்படுவதோடு, விலைமதிப்பில்லா பல இளைஞர்களின் எதிர்காலமும் காப்பற்றப்படும் என நம்பப்டுகிறது.