உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வந்தது.
மேலும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும். கொலீஜியம் அமைப்பிற்கு தெரிந்தவர்கள் அல்ல என்றும் அவர் பேசியிருந்தார்.
நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டதாகவும் இதுதொடர்பான ஆவணத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான கொலீஜியம், தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு, ஏப்ரல் 19ஆம் தேதி, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தத்தா நியமிக்கப்பட்டார். கடந்த 1989ஆம் ஆண்டு, மேற்கு வங்க பார் கவுன்சிலின் உறுப்பினராக தத்தா பதிவு செய்து கொண்டார்.