கல்வி மட்டுமே யாராலும் திருடவோ, அழிக்கவோ முடியாத செல்வம் என்பதை உணர்ந்தவர்களில் நாகேஷும் ஒருவர். 


அதனாலேயே என்னவோ பகலில் கல்லூரி ஒன்றில் கவுரவ விரிவுரையாளர் ஆகவும் இரவில் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலியாகவும் பணியாற்றி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உழைத்து வருகிறார் ஒடிசாவைச் சேர்ந்த 31 வயது இளைஞர் நாகேஷ்.


ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நாகேஷ் பத்ரோ. இவர் தினந்தோறும் காலையில் தனியார்  கல்லூரி ஒன்றில் கவுரவ விரிவுரையாளர் ஆகப் பணியாற்றி வருகிறார். இரவில் பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்தில் சுமை தாக்கும் தினக் கூலிப் பணியைச் செய்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக நாகேஷ் இந்தப் பணிகளைச் செய்யவில்லை. ஏழை மாணவர்களுக்காகத் தான் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்கவே இந்த வேலையை மேற்கொள்கிறார். 




யார் இந்த பத்ரோ?


ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் பத்ரோ. அப்பா ஆடுகளை மேய்த்துக் குடும்பத்தை கவனித்து வந்தார். வருவாய் வயிற்றுக்கும் வாய்க்குமே போதாமல் இருந்ததால், 2006-ல் உயர்நிலைப் பள்ளிக்கான தேர்வைத் தவறவிட்டார் பத்ரோ. வேலைக்குச் செல்லத் தொடங்கியவர் 2011-ல் ரயில்வே சுமை தூக்கியாகத் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். அங்கு பணியாற்றிக் கொண்டே தொலைதூரக் கல்வி மூலம் 2012-ல் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடிவெடுத்தார். 


பிளஸ் 2 படிப்பை முடித்தவர், இளங்கலைப் படிப்பையும் தொடர்ந்து முதுகலைப் படிப்பை பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். இரவில் கூலியாகப் பணியாற்றிக் கொண்டே அனைத்துப் படிப்புகளையும் பத்ரோ வெற்றிகரமாக முடித்தார். 


அடுத்து நடந்தது குறித்துப் பேசும் இளைஞர் நாகேஷ் பத்ரோ, ’’கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டாமே என்று தோன்றியது. அதனால் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்பிக்க ஆரம்பித்தேன். நாட்கள் செல்லச் செல்ல மாணவர்களின் எண்ணிக்கை கூடியது. 




மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததும் 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பயிற்சி மையத்தைத் தொடங்கி விட்டோம். கல்லூரிப் பணி முடிந்த பிறகு, மாலை பயிற்சி மையம் வந்து இந்தி மற்றும் ஒடியா மொழிகளை நானே கற்பிக்கிறேன். பிற பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களை அமர்த்தி இருக்கிறோம். 


இப்போது எங்களின் பயிற்சி மையத்தில் 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊதியமாக அளிக்க வேண்டியுள்ளது. ரயில் நிலையத்தில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை இதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். 


கவுரவ விரிவுரையாளர் பணி மூலம் மாதம் 8 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. அதை கிராமத்தில் வசிக்கும் தாய், தந்தையில் செலவுக்கு அனுப்பி விடுகிறேன். மக்கள் என்ன நினைப்பார்களோ, நினைத்துக் கொள்ளட்டும். எனக்குக் கற்பிக்கப் பிடிக்கும். ஏழை மாணவர்களுக்காக அதைத் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன்’’ என்று விடை கொடுக்கிறார் நாகேஷ் பத்ரோ.