காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியை எட்டி உள்ளது.
பாதுகாப்பு குளறுபடி
இந்நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் எழுதிய கடிதத்தில், "சனிக்கிழமை அன்று டெல்லியில் நுழைந்த நடைபயணத்தின்போது பாதுகாப்பில் பலமுறை குளறுபடி ஏற்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இசட்+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை பராமரிப்பதிலும் தோல்வி அடைந்தது.
நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து செல்லும் யாத்ரிகளும் பாதுகாப்பு வளையத்தை அமைக்க வேண்டியிருந்தது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டெல்லி காவல்துறை பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.
அத்துமீறிய உளவுத்துறை
நடைபயணத்தில் பங்கேற்றவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் (Intelligence Bureau) விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநில உளவுப்பிரிவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், நடைபயணத்தின் கன்டெய்னர்களுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர்.
இது தொடர்பாக, ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல அரசியலமைப்பு உரிமை உள்ளது.
இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கான ஒரு பாத யாத்திரை. அரசாங்கம் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல், காங்கிரஸ் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்தபடியாக, இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் ஜனவரி 3ஆம் முதல் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்குள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.