அரசியல் என்றாலே பல விசித்திரமான, விநோதமான விஷயங்களுக்கு பஞ்சமிருக்காது. அதை கலாய்த்ததில் இன்றளவும் கவுண்டமணி காமெடியை அடித்துக் கொள்ள வேறெதவும் கிடையாது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற கவுண்டமணியின் காமெடி க்ளாஸ் லெவல். அந்த வகையில் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.


திடீர் திருமணம்:


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விரைவில் நகராட்சித் தேர்தல் வரவிருக்கிறது. ராம்பூர் நகராட்சி கவுன்சிலருக்கான இடம் மகளிர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் தற்போதைய தலைவர் மமூன் கான். இவர் திருமணமாகாதவர். ஆனால் இந்த முறை அந்த நகராட்சிக்கு பெண் வேட்பாளர் தான் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மமூன் கான் ஒரு துரித முடிவை எடுத்தார். ராம்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தனக்கு மணம் பேசி முடித்தார். அவருடைய திட்டம் தனது மனைவியை அந்த வார்டில் நிறுத்தி வெற்றி பெற்று பின்னர் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே. இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ராம்பூர் நகராட்சிக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஏப்ரல் 15 ஆம் தேதி இன்று அவர் திருமணம் செய்து கொண்டார். மமூன்ஷா கான் தன் வாழ்வில் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்றிருந்த நிலையில் தற்போது அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.


எந்த வார்டில் போட்டி?


இது குறித்து அவர் கூறுகையில், நான் திருமணமே செய்யக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் எனக்கு ஏப்ரல் 15ல் திருமணம் நடைபெற இருக்கிறது. நான் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவேன் என்பது எனக்குத் தெரியவில்லை. எந்த வார்டில் என்றும் தெரியவில்லை என்றார்.


உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 17 மாநகராட்சிகள், 200 பஞ்சாயத்து ஒன்றியம், 545 டவுன் பஞ்சாயத்துகளின் தலைவர் பதவிகளுக்கான ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் 4 மேயர், 54 நகராட்சி தலைவர், 147 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன.


உத்தரப்பிரதேச அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இடஒதுக்கீடு எதையும் பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டது.  இந்நிலையில் தான் தேர்தலுக்காக ஒருவர் திருமணம் செய்து கொண்ட விநோதம் நடந்துள்ளது.