நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சீரான கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்க பான் இந்தியா கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் வழக்கறிஞர் செல்வின் ராஜா மூலம், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே சீரான தடுப்பூசியை இலவசமாக வழங்க உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் அல்லது கண்காணிப்பின் கீழ் ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுமாறு கோரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21 ன் படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி போட உரிமை உண்டு. தொற்றுநோய் வேகமாக பரவுவதால் மக்கள் சரியான நேரத்தில் சிகிச்சை இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள், மயானங்கள் இரவும் பகலும் இயங்குகின்றன, இறந்தவர்களை அடக்கம் செய்ய பல மணிநேரம் காத்திருக்கும் சூழலில், நாட்டு மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பியுள்ளனர் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வெவ்வேறு விலைகளில் தடுப்பூசியை பெரும்பாலான மக்களால் வாங்க முடியாது. ஏழைகள் உட்பட மக்களில் பெரும் பகுதியினருக்கு இலவச நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவது குடிமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதாகவும் எஸ்.டி.பி.ஐ., வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.