கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 16 கோடியே 3 லட்சத்து 7 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 30 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 677 ஆக உள்ளது. ஒரு கோடியே 89 லட்சத்து 29 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 288 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் என உயிர்பிழைத்தலுக்கு தேவையான அனைத்தும் பற்றாக்குறையாக உள்ளன. மக்கள் மருந்துக்கும், ஆக்சிஜனுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கொடூர காலத்தில் பலரின் உதவியும், மனிதநேயமும் நாம் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதைக்கிறது. அப்படியான ஒருவர் தான் மன்சூர் அஹமத். ஆஸ்துமா நோயாளியான மன்சூர் கடந்த மூன்று வருடங்களாக மூக்கில் சொருகப்பட்ட ஆக்சிஜன் ட்யூப் உடன் தான் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் இன்று மற்றவர்களின் ஆக்சிஜனுக்கான ஓடிக்கொண்டு இருக்கிறார் மன்சூர்.
காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர், சிறிய சரக்குவாகனம் வைத்துள்ளார். கொரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ள நிலையில் தன்னுடைய வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு தேவைப்படும் இடத்திற்கு கொண்டு சேர்க்கிறார். இது குறித்து பேசும் அவர், ‛நான் எடுத்துச் சென்று கொடுக்கும் ஆக்சிஜன் சிலிண்டரால் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டால், ஒருவர் ஆசுவாசமாக உணர்ந்தால் அதுவே எனக்கு போதுமானது. ஒரு நல்ல உணர்வாக இருக்கும். நானும் ஒரு ஆஸ்துமா நோயாளி. ஆக்சிஜன் இல்லை என்றால் என்ன கஷ்டம் என எனக்கு தெரியும். அதனால் என்னால் முடிந்ததை செய்கிறேன்,’ என்றார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி, காலியான சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்புவது போன்ற வேலையையும் இவர் செய்து வருகிறார். பேரிடம் பல இழப்புகளை தந்தாலும், சில நல்உள்ளங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தே இருக்கும். அப்படி தான் இவர்களைப் போன்றோரும். அருகில் இருக்கும் வரை இவர்களை சமூகம் கண்டுகொள்ளாது. நெருக்கடி வரும் போது இவர்கள் செய்யும் உதவிகள் தான், பின்னர் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள செய்யும். அந்த வகையில் மன்சூரின் சேவை பலருக்கு சுவாசம் அளித்திருக்கிறது. எவன் ஒருவன் தன் சிரமங்களை பிறரிடத்தில் ஒப்பிட்டு பார்க்கிறானோ என்றே மனிதம் மலரத் துவங்கும்.