மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டமும், வன்முறையும் தொடர்ந்து வருகிறது. அசாதாரண சூழலை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.


மணிப்பூர் கலவரம்:


மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.


"மனுப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட வருடங்களாக போராடி வருகின்றன" என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசம் வழங்கியது மணிப்பூர் உயர் நீதிமன்றம்.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. இந்த கலவரத்தில் தற்போது வரை 120 பேர் உயிரிழன்ந்துள்ளனர். மேலும் 3000 த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


பள்ளிகள் திறப்பு: 


இப்படி இருக்கும் சூழலில் திங்கள்கிழமையன்று முதலமைச்சர் தலைமையில் ராணுவம், துணை ராணுவம், அதிகாரிகள் கலந்துக்கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கடந்த 2 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் இன்று முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


இது தொடர்பாக முதலமைச்சர் பிரன் சிங் கூறுகையில், 5 மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆனாலும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தீர்ந்தபாடில்லை. நேற்றைய தினம் கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் ராணுவத்தினரிடம் இருந்து ஆயதங்களை அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.