40 எம்எல்ஏக்கள் அஜித் பவார் அணியில் இருப்பதாகவும், 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் என்சிபிக்கு 53 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும் என்சிபி செயல் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்ட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் நிலவியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான அஜித் பவார், கட்சி தலைமைக்கு எதிராக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் சென்று பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் அமைந்த இந்த கூட்டணிக்கு, 2019ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி அதிகாலையில் ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 5 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.
இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே தேசியவாத காங்கிரஸில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் அஜித் பவார் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, தேசியவாத காங்கிரசின் செயல் தலைவராக சுப்ரியா சுலேவை, சரத் பவார் அண்மையில் நியமித்தார். இதனால், அஜித் பவார் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், அஜித் பவார் மீண்டும் தனது ஆதரவு எம். எல்.ஏக்கள் உடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் இரு பிரிவுகளும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த மும்பையில் இன்று, ஷரத் பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அஜித் பவாருக்கு அதிகபட்ச எம்.எல்.ஏக்கள் உடன் இருப்பதாகவும், சரத் பவார் தரப்பிற்கு வெறும் 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயாமல் இருக்க அஜித் பவாருக்கு குறைந்தது 36 என்சிபி எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும். மேலும் பாஜகவுடன் சித்தாந்த வேறுபாடு இல்லை என்றும், சிவசேனாவுடன் என்சிபி கைகோர்த்தால், நிச்சயமாக பா.ஜ.க வுடன் இணையும் எனவும் அஜித் பவார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் பவார் மற்றும் அமைச்சர்களாக பதவியேற்ற 8 எம்எல்ஏக்கள் மீது சரத் பவார் தரப்பு ஏற்கனவே தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், சரத் பவாரால் எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியப்பட்ட ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் கூட்டத்தின் முடிவில் யாருக்கு பலம் அதிகம் என்பது வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.