நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள பள்ளியில் மாணவிகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் வரலாற்று கதைகள் இருக்கும் நிலையில் சில பண்டிகைகள் இனம், மதம், மொழி கடந்து அனைத்து மாநில மக்களாலும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ரக்ஷா பந்தன் பண்டிகையும் ஒன்று. சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை போற்றும் வகையில் வட மாநிலங்களில் இந்த பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முழு பௌர்ணமி தினத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் பொருள் பாதுகாப்பான பந்தம் (உறவு) என்பதாகும். இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ஒரு கயிறு கட்டுவர். இது தங்கள் சகோதரர்களுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்து கட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலாக சகோதரிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள்.
இதனிடையே நடப்பாண்டுக்கான ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 30) ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் , பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'Thanks Jawan' என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏராளாமன இஸ்லாமியப் பெண்கள் தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை வீரர்களுக்கு அணிவித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வட மாநிலங்களில் கோயில்கள், சுற்றுலா தளங்கள் பொதுமக்கள் வருகையால் களைக்கட்டியது.
மேலும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாநில அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவிகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவருடனும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.