இந்தியாவே கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக போராடிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து தரப்பு மக்களையும் சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது. மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுகிறது அரசு. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு என பல பிரச்னைகளும் எழுந்துள்ளன. இந்த சோதனையான காலத்தில் மனிதநேயம் பல இடங்களில் மனங்களை வென்றுள்ளது. அப்படியான ஒரு சேவையைத்தான் செய்து வருகிறார் தத்தாத்ரேயா சவாந்த்.
மும்பையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான இவர் தன்னுடைய ஆட்டோவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பயன்படுத்தி வருகிறார். இதற்காக அவர் மருத்துவரைப் போல முழுவதுமாக கவச உடை அணிந்து, ஆட்டோவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு இலவசமாக தன்னுடைய ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார் தத்தாத்ரேயா.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் தனியார் ஆம்புலஸ்க்கு பணம் கொடுக்க முடியவில்லை. வேறு வாகனங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்வகளை அனுமதிப்பதில்லை. அதனால் என்னுடைய சேவை அவர்களுக்கு உதவியாக இருக்கும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறேன். அதேபோல் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு கொண்டு சேர்க்கிறேன் என்றார். கொரோனா குறித்து அச்சம் கொள்ளாமல் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவர்களுக்கு சேவை செய்யும் பள்ளி ஆசிரியர் தத்தாத்ரேயாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.