மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமுல் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் கட்சியின் தலைவரான மமதா தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இது குறித்து தெரிவித்திருந்த மமதா, மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு தொகுதியை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. நான் தோல்வியடைந்தாலும், மாநிலத்தில் நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். ஆனாலும் நந்திகிராமில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. அதனால் நான் நீதிமன்றம் நாடுவேன் என தெரிவித்தார். 




இந்நிலையில் இன்றே ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மமதா பானர்ஜி. இன்று மாலை திரிணாமுல் அலுவலகத்தில் அனைத்து எம் எல் ஏக்களுடன் மமதா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம் எல் ஏக்கள் ஒருமனதாக மமதாவை முதல்வராக தேர்வு செய்வார்கள் என தெரிகிறது. ஏற்கெனவே மமதாவின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பெரிய அளவில் அமைச்சரவை, அதிகாரிகள் மாற்றம் இருக்காது என்பதால் மிக விரைவாக மமதாவின் புதிய ஆட்சி தொடங்கப்படும் என தெரிகிறது. 





இதற்கிடையே மமதா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்ததை அடுத்து அவர் முதல்வர் பதவியை தொடர வேண்டுமானால் 6 மாதக் காலத்திற்கும் அவர் மீண்டும் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைய வேண்டும். எனவே அவர் தனக்கு சாதகமான தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. குறிப்பாக மமதாவின் சொந்த தொகுதியான பவானிபூரில் களம் இறங்கி எளிதாக அவர் வெற்றியடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் துரிதமாக அரசு செயல்பட வேண்டி இருப்பதால் உடனடியாக ஆட்சியமைக்க உரிமை கோருவதாக திரிணாமுல் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.