கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை நாட்டில் 1.99 கோடி கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாள் மட்டும் 3,68,060 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அரசு தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக அரசுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூவர் அமர்வு. அதில் கொரோனாவை அதிகமாகப் பரப்பும் நிகழ்வுகள் மற்றும் மக்களின் ஒன்றுகூடல்களுக்குத் தடைவிதிக்க மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வைரஸைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் லாக்டவுன் அறிவிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக உத்தரவில், ‘லாக்டவுன் சமூகப் பொருளாதார அளவில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உணர்ந்துதான் நாங்கள் இதைச் சொல்கிறோம். அதனால் லாக்டவுன் அறிவிக்கப்படும் சூழலில் அதற்கு முன்பே இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு பிறகு அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்’ என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.