ராஜஸ்தானில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன், ஆசிரியைக்காக வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக பள்ளி ஆசிரியர் அடித்ததால் சனிக்கிழமை உயிரிழந்தார். அந்த ஆசிரியரை போலீஸார் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஜலோர் மாவட்டத்தில் உள்ள சைலா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஜூலை 20-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. கண் மற்றும் காதில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக 300 கிமீ தொலைவில் உள்ள அகமதாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சையின் போதே சிறுவன் உயிரிழந்ததாக போலீஸ் அலுவலர்கள் தெரிவித்தனர்.
நிலைமை மோசமடைவதைத் தடுக்க அப்பகுதியில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவில் நீதி உறுதி செய்யப்படும்.
முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். சிறுவனின் உடல் உடற்கூராய்வுக்காக போலீஸ் குழு ஒன்று அகமதாபாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
"சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஆசிரியர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்," என்று வழக்கை விசாரிக்கும் ஒரு காவல்துறை அலுவலர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை தேவாரம் மேக்வால் கூறுகையில், "எனது மகனை ஆசிரியர் சைல் சிங் தனது பாத்திரத்தில் உள்ள தண்ணீரைக் குடித்ததற்காக அடித்து, சாதி ரீதியாக தகாக வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். சிறுவனுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது, நான் அவரை உதய்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று, பின்னர் அகமதாபாத்திற்கு அழைத்துச் சென்றேன், அங்கு அவர் இறந்தார்" என்றார். இது தொடர்பாக மாநில கல்வித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்