நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பெருமளவில் கொண்டாட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது.
வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றவும், சமூக வலைதள புரொஃபைல் பிக்சரில் தேசியக் கொடியை வைக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் சுதந்திர தினத்தை பலநூறு மடங்கு உற்சாகத்துடன் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.
பிரதமர் உரையை எங்கு கேட்கலாம்?
சுதந்திர தின விழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் சிறப்புரை ஆற்றுவார். நாளை (ஆகஸ்ட் 15) காலை 7.30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படும். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுவார்.
நிகழ்ச்சியை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
ஆகஸ்ட் 15 சுதந்திர தின நிகழ்ச்சியை தேசிய ஊடகமான தூர்தர்ஷன் நேரலையில் ஒளிபரப்புகிறது. அதுமட்டுமல்லாமல் பிஐபி எனப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோவின் யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் ஹேண்டிலில் இந்த உரை லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும். பிரதமர் அலுவலக ட்விட்டர் ஹேண்டிலிலும் சிறப்புரை நேரலையில் வழங்கப்படும்.
குடியரசுத் தலைவர் உரை:
சுதந்திர தினத்தின் முதல் நாள் மாலை குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்காக உரையாற்றுவது மரபு. அந்த மரபின்படி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தான் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் கொண்டாடப்படும் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் உரையில், "இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், அவர் தனது வாழ்த்து உரையில், இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப் பெரிய வெற்றி என கூறியுள்ளார். மேலும், அவர் தனது வாழ்த்தில், இந்தியா ஒருபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மறக்காது. நமது நாட்டின் மூவண்ணக் கொடியான தேசியக் கொடி நாட்டில் அனைவரது வீட்டிலும் பறக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் பிராந்திய வீரர்களாக மட்டுமில்லாமல், நாட்டின் அடையாளமாக விளங்குகின்றனர். 2047ஆம் ஆண்டு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவு நனவாக்கி இருக்க வேண்டும். நமது சுதந்திர போராட்ட வீரர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். மேலும், இந்தியாவின் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது, இந்தியா அதில் இருந்து மிகவும் விரவாக மீண்டு வந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு மிகப் பெரிய சாதனைகளை நாம் செய்துள்ளோம். 200 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தி பல வளர்ந்த நாடுகளை விட முன்னோக்கிச் சென்றுள்ளோம்" என்று கூறியுள்ளார்.