தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 தன்பாலின ஜோடிகள் தங்கள் திருமணத்தை, இந்திய சிறப்பு திருமணங்கள் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இந்த நோட்டீஸை பிறப்பித்துள்ளது.


சுப்ரியோ சக்ரோபர்த்தி, அபய் தங் கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களின் இணையேற்பின் 9வது ஆண்டுவிழாவை கொண்டாட டிசம்பர் 2021ல் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பெற்றோர், நண்பர்கள் முன் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்பதால் அதை செய்யமுடியவில்லை. இந்நிலையில் தான் அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். அதேபோல் பார்த் ஃபிரோஸ் மெஹ்ரோத்ரா, உதய் ராஜ் ஜோடியும் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹீமா கோலி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசுக்கும், அட்டர்னி ஜெனரலுக்கும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர்.


மனுதாரர்கள் தரப்பில் தன்பாலினர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காதது அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 14, 19 வழங்கும் உரிமையைப் பறிப்பதாகும் என்று கூறியுள்ளனர்.


‘ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுய விருப்பத்துடன் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் படி தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018ல் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.


சட்டப்படி வயது வந்த இருவர் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடல்ரீதியான உறவு வைத்துக் கொள்வதை தடுக்க முடியாது. அப்படி தடுத்தால், அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை சம உரிமையையும், கவுரவமாக வாழும் உரிமையையும் மீறும் செயலாகும். எனவே, இத்தகைய உறவை தடை செய்யும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.


சட்டப்பிரிவு 377-ன் கீழ், இயற்கைக்கு மாறாக விலங்குகள், குழந்தைகளிடம் உடல்ரீதியான உறவில் ஈடுபடுவது குற்றம் என்பதில் மாற்றம் இல்லை. ஆண் - பெண் தன்மை உடையவர்கள், பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஒரே பாலின உறவில் நாட்டம் கொண்டோர் என பல்வேறு பிரிவினராக உள்ளோர் ‘எல்ஜிபிடிக்யூ’ என அழைக்கப்படுகின்றனர். இவர்களை துன்புறுத்த பிரிவு 377 பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தனை காலம் இவர்களுக்கான அடிப்படை உரிமையை வழங்காமலும், சுதந்திரமாக வாழ விடாமலும், ஒருவித அச்ச  உணர்வில் இருக்க வைத்ததன் மூலம் இவர்களிடம் வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றபோதும் இதுவரை தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை.


இந்நிலையில் தான், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.