பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்த 17வது நிமிடத்தில், சுமந்து செல்லப்பட்ட 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்டார சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.


பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் 9 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணை நோக்கி குறிப்பிட்ட நேரப்படி சரியாக நேற்று காலை 11.56 மணிக்கு ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் இந்த ஆண்டில் ஏவப்படும் 5வது செயற்கைக்கோள் ஆகும். மேலும், இந்த ஆண்டில் செலுத்தப்படும் கடைசி ராக்கெட் இது.


திட்டமிட்டப்படி ராக்கெட்டின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த செயற்கைக்கோள்கள் கடலின் தன்மை மற்றும் காற்றின் திசையை கண்காணிக்க உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 






ஏற்கனவே, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவும், அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. அண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிரரம்ப்(PRARAMBH)' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் அந்த ராக்கெட்டை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றிகரமாக பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 


பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடைகொண்ட, 'ஓசன்சாட்03' என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உடன் 8 நானோ செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது. அவற்றில்  அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள் மட்டும் நான்கு உள்ளன. 


ஓசன்சாட்03 செயற்கைக்கோள் 1,117 கிலோ எடை கொண்டது. இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்.


அதோடு, தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் ஆனந்த் ஆகிய செயற்கைக்கோள்களை, இஸ்ரோ மற்றும் பூடானை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதோடு, சுவிட்சார்லாந்தின் ஒரு செயற்கைக்கோளும் அடங்கும்.


 ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 17 நிமிடத்தில் அதிலிருந்து பிரிந்த ஓசன்சாட் செயற்கைக்கோள் அதன் வட்டப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதிப்படுத்தினார். இதனை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.     


இந்த பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்து ஒத்துழைத்த அனைத்து விஞ்ஞானிகள் அனைவரையும் பாராட்டுகிறேன் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.