பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவலர் ஒருவர் உயிரைப் பணையம் வைத்து துரிதகதியில் செயல்பட்டு மடக்கிப்பிடித்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
டெல்லி மக்களுக்கு அறிவுரைகள் வழங்குவது தொடங்கி தீரம் மிக்க காவல் துறையினரை அறிமுகப்படுத்துவது வரை டெல்லி காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் படு ஆக்டிவாக இருந்து வருகிறது.
அந்த வகையில் முன்னதாக வழிப்பறியில் ஈடுபட்ட நபரை டெல்லி, ஷாபாத் டைரி காவல் துறையைச் சேர்ந்த சத்யேந்திரா எனும் காவலர் மடக்கிப் பிடித்த வீடியோ இந்தப் பக்கத்தில் பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும், “தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்ததன் மூலம் 11 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. குற்றவாளியின் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனவும் டெல்லி காவல் துறையின் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1.3 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்ஸ்க்ளைக் குவித்து ட்விட்டரில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் குற்றவாளியை மடக்கிப் பிடித்த காவலரை வாழ்த்தி மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முந்தைய சம்பவம்
முன்னதாக இதேபோல் டெல்லி காவலர் ஒருவர், காயங்கள் ஏற்பட்ட போதிலும் அதை பொருட்படுத்தாமல் ஒரு கொள்ளையனைப் பிடித்த சம்பவம் பாராட்டைப் பெற்றது. கைதான கொள்ளையர் 30 வழிப்பறி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைமைக் காவலர் சேத்தன் மற்றும் கான்ஸ்டபிள் பிரதீப் ஆகியோர் காரில் ரோந்துக்கு சென்று கொண்டிருந்தபோது, காலை 10.30 மணியளவில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் அப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
பவானாவின் செக்டார் 1ல் உள்ள போக்குவரத்து ரவுண்டானா அருகே 24 வயதான இர்ஃபான் மற்றும் ராகுல் என அடையாளம் காணப்பட்ட இருவரையும் காவல் துறையினர் கண்டுபிடித்த நிலையில், அவர்களது பைக்கின் நம்பர் பிளேட் காகிதத்தால் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவலர்களைக் கண்டதும் வேகமாக அவர்கள் செல்ல முயன்றபோது, தலைமைக் காவலர் சேத்தன் காரை வழி மறித்ததால், இருவரும் பைக்கில் இருந்து விழுந்தனர். இர்ஷாத், ஹெட் கான்ஸ்டபிள் சேட்டனின் வலது தோளில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற நிலையில், மற்றொரு காவலரான பிரதீப் முதலில் அவர்களை எச்சரித்துள்ளார். பின்னர், தனது சர்வீஸ் ரிவால்வரால் குற்றவாளிகளை கால்களில் சுட்டார்.
கான்ஸ்டபிள் பிரதீப் துரத்திச் சென்ற நிலையிலும் ராகுல் தப்பி ஓடிவிட்டார். இர்ஷாத் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பைக் மற்றும் கத்தியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.